UPDATED : ஜன 01, 1970 05:30 AM
ADDED : டிச 12, 2009 11:09 PM

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் டில்லியில் அக்பர் சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு அடுத்த பங்களாவில் தான் சோனியா வசிக்கிறார். வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு இடையே, உள்ளேயே ஒரு வழி உள்ளது. அதன் வழியாக காங்கிரஸ் அலுவலகத்திற்கு சோனியா நடந்தே வந்துவிடுவார். அவர் வரும் போது, கட்சித் தொண்டர்கள் அவர் பார்வை தம் மீது படுமா என்று ஆங்கே காத்திருப்பர்.இனிமேல் இப்படி நடக்காது. காரணம் காங்கிரஸ் அலுவலகம் இடம் மாறுகிறது. கோட்லா சாலை எனப்படும் இடத்திற்கு காங்கிரஸ் அலுவலகம் மாற உள்ளது. தற்போது காங்கிரஸ் அலுவலகம் உள்ள பங்களாவில் சோனியாவின் பாதுகாப்பை கவனிக்கும் எஸ்.பி.ஜி., அலுவலகம் வரப் போகிறது.பிரதமர், அவரது குடும்பம், முன்னாள் பிரதமர் மற்றும் ராஜிவின் குடும்பங்களை எஸ்.பி.ஜி., பாதுகாத்து வருகிறது.அலுவலகம் மாற்றுவதிலும் அரசியல். புதிதாக ஒதுக்கப்பட்ட இடம் உள்ள சாலையின் பெயர் தீன்தாயாள் உபாத்யாயா சாலை. காலம் சென்ற பா.ஜ., தலைவரின் பெயர் இது. எதிர்க்கட்சித் தலைவரின் பெயருள்ள சாலையில் எப்படி நம் அலுவலகம் செயல்பட முடியும் என்று கேள்விகள் எழுப்பினர் காங்கிரசார்.இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள அலுவலகத்திற்கு அடுத்த தெருவின் பெயரை பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்தனர். அதனால் தீன்தாயாள் உபாத்யாயா சாலைக்கு பதிலாக கோட்லா சாலை என விலாசம் மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் தனி மாநிலம்?

தெலுங்கானா இனி தனி மாநிலம் என்று அறிவித்ததிலிருந்து மத்திய அரசுக்கு பிரச்னை. ஆந்திரா எரிந்து கொண்டிருக்கிறது. மற்ற கட்சிகளும் உ.பி., மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை இரண்டாக்க வேண்டும் என்று விவகாரத்தை பெரிதாக்கி மத்திய அரசுக்கு தலைவலியைக் கொடுத்து வருகின்றன.இந்நிலையில், பார்லிமென்டின் சென்ட்ரல் ஹாலில், தமிழகத்தை இரண்டாகப் பிரித்து தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று பேச்சு அடிபடுகிறது. ஒரு காங்கிரஸ் எம்.பி., தன் சக எம்.பி.,க்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.'தெலுங்கானாவிற்கு என்ன பெரியா சப்போர்ட் இருக்கு, எங்களுக்கு அதைவிட சப்போர்ட் அதிகம். வன்னிய நாடுன்னு தனி நாடு போராட்டம் ஆரம்பிச்சா அதை நிறுவியே காட்டுவோம்' என்று அந்த எம்.பி., சொன்னார்.இத்தோடு விஷயம் நிற்கவில்லை. வன்னிய நாட்டிற்காக தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என்று சவால் விட்டார் அந்த தமிழக எம்.பி.,

எம்.பி.,க்களுக்கு ப்ளாக்பெரி வியாதி

பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் போது பார்லிமென்டின் சென்ட்ரல் ஹால் பரபரப்பாக இருக்கும். அரசியல்வாதிகள் தொடர்பான வதந்திகளை ஆவலோடு அலசிக் கொண்டிருப்பார்கள் எம்.பி.,க்கள்.ஆனால், சமீப காலமாக சில அமைச்சர்களும், எம்.பி.,க்களும் சென்ட்ரல் ஹாலின் ஒரு மூலையில் அமர்ந்து, ப்ளாக்பெரி மொபைல் போனில் பிசியாக உள்ளனர். இந்த போனில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய சைட்களில் சென்று அரசியல் நிலை குறித்து 'கமென்ட்' செய்கின்றனர். விரைவில் அனைத்து எம்.பி.,க்களுக்கும் ப்ளாக்பெரி மொபைல் போன் வழங்கப்பட உள்ளது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மூத்த அரசியல்வாதிகள், 'சென்ட்ரல் ஹாலில் என்ன மாதிரியான விவாதம் நடக்கும். இப்போது ப்ளாக்பெரி வியாதியாகிவிட்டதே' என்று வருத்தப்படுகின்றனர்.